Sri Ramakrishna
ஸ்ரீராமகிருஷ்ணர் உலகிற்கே ஒரு செய்தியுடன் வந்த அவதார புருஷர். அவதார புருஷர் ஒரு செய்தியுடன் வருகிறார்.
அந்தச் செய்தி பல்வேறு அம்சங்களுடன் கூடியது; பல பரிமாணங்களை உடையது; பல துறைகளிலும் மாற்றங்களை, வளர்ச்சியை விளைவிப்பது.
இந்த அம்சத்தில் ஒன்று வழிபாடு – அவரை இஷ்டதெய்வமாக வழிபடுவதன் வாயிலாக பலர் இறைநெறியில் முன்னேறுகின்றனர். மனித சமுதாயத்தில் கணந்தோறும் மாற்றங்கள் நிகழ்ந்தவண்ணம் உள்ளன.
அந்த மாற்றங்களுக்கேற்ற ஆன்மிக நிறைவாக புதிய அவதார புருஷர் தோன்றுகிறார். எனவே அவரது வாழ்க்கையும் செய்தியும் எளிதாகப் பிறரைக் கவர்கின்றன; அவரை இஷ்டதெய்வமாக ஏற்றுக்கொண்டு வழிபடுவது இயல்பாக நடைபெறுகிறது.
இவ்வாறு ஆன்மிக வாழ்க்கைக்கு ஒரு புதிய இஷ்டதெய்வமாகத் திகழ்கிறார் ஸ்ரீராமகிருஷ்ணர். இப்படி ஸ்ரீராமகிருஷ்ணரை இஷ்டதெய்வமாகக் கொண்டு செய்யப்படுகின்ற ஸ்ரீராமகிருஷ்ண வழிபாடு என்பது சசி மகராஜின் ‘சிறிய செய்தி ‘யாகத் திகழ்கிறது.
இந்த ஸ்ரீராமகிருஷ்ண வழிபாட்டை ஆரம்பித்தவர் அன்னை ஸ்ரீசாரதா தேவி. காலத்தின் தேவையான இந்த வழி பாடுபற்றி ஸ்ரீராமகிருஷ்ணரும் சூசகமாக அறிவித்துள்ளார். சுவாமி ராமகிருஷ்ணானந்தர் இந்த வழிபாட்டை நெறிப்படுத்தி, வழிபாட்டிற்கான மந்திரங்களை இணைத்து, ஒரு சம்பிரதாய பூஜை முறையாக்கினார். இது சசி மகராஜின் பெரிய கொடையாகும்.